உலக அளவில் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்துக்கான விலையை மனித குலம் கொடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாட்ரிட்டில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில், உலக நாடுகள் கார்பன் வெளியேற்றத்தைத் தடுப்பதன் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்களை காற்று மாசிலிருந்து காக்க முடியும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுகுறித்து உலக சுகாதார துறை அமைப்பின் சுற்றுச்சூழல் நிர்வாக இயக்குனர் மரியா கூறும்போது, “காலநிலை நெருக்கடிக்கான விலையை மனித குலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது நுரையீரல்களும், மூளையும் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்றத்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்” என்றார்.
இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவதால் சென்னை, கொல்கத்தா, சூரத், மும்பை போன்ற நகரங்களில் கடல் மட்டம் உயர்ந்து மூழ்கக்கூடும். மேலும், எதிர்காலத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதியில்லாத இடமாக மாறக் கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பு தெரிவித்தது.
முன்னதாக, காலநிலை மாற்ற விளைவுகளைக் கருத்தில் கொண்டு உலக நாடுகள் அதற்கான் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சமீபத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.