உலகம் முழுவதுமே செல்போனை அருகில் வைத்துக் கொண்டு தூங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் அதிகபட்சமாக இந்தியாவில் 74 சதவீதம் பேர் தங்கள் செல்போன் களை அருகில் வைத்துக் கொண்டு தூங்குகிறார்கள்.
செல்போன்கள், ஸ்மார்ட் போன்களாகி விட்ட பிறகு அது மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத கருவியாகிவிட்டது. முக்கியமாக இளைய தலை முறையினர் செல்போன் இல்லாவிட் டால் இயல்பாக இயங்கவே முடியாது என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
இந்நிலையில் சர்வதேச அளவில் மக்கள் எந்த அளவுக்கு செல்போன்களை தங்களுடனேயே வைத்துக் கொள்கிறார்கள் என்பது தொடர்பாக மோட்டோரோலா நிறுவனம் ஆய்வு நடத்தியது.
ஸ்மார்ட்போன் அதிகம் புழக்கத்தில் உள்ள அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரேசில், பிரிட்டன், மெக்சிகோ, ஸ்பெயின் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் இந்தியாவில் அதிகபட்ச மாக 74 சதவீதம் பேர் செல்போனுடன் தான் தூங்குகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக சீனாவில் 70 சதவீதம் பேர் செல்போனை அருகில் வைத்துக் கொண்டு இரவை கழிக்கின்றனர். மேலும் பலர் குளிக்கும்போது கூட செல்போனை அருகில் வைத்துக் கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேபோல 54 சதவீதம் பேர் டாய்லெட்டில் இருக்கும்போதும் செல்போனை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். சீனா, பிரேசிலில் இந்த எண்ணிக்கை மிக அதிகம்.
அதேபோல தங்களைப் பற்றிய பல ரகசியங்கள் தங்கள் செல்போனில்தான் உள்ளது. அதே மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட கூற மாட்டோம் என்று 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். வார விடுமுறை நாட்களில் எங்கள் துணையை பிரிந்து இருந்தாலும் இருப்போமே தவிர செல்போன் இல்லாமல் இருக்கமாட்டோம் என்று 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.
உறவுகள் சரியாக அமை யாதபோது செல்போன் களுடன்தான் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கிறோம் என்று 39 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.