இராக்கில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 400 - ஐ தாண்டியுள்ளதாக மருத்துவ தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியில், “இராக்கில் கடந்த ஒரு மாதமாக நடக்கும் போராட்டத்தில் பலியானவரகளின் எண்ணிக்கை 400- ஐ தாண்டியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் ஆயுதம் இல்லாமல் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள்’’ என என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் இராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 45 பேர் பலியாகினர். 150க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
தொடரும் வன்முறை
இராக்கின் தென் பகுதியில் இருக்கும் நஜஃப் நகரில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் புதன்கிழமை இரவு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரக அலுவலகக் கட்டிடத்துக்குத் தீ வைத்தனர்.
ஆயுதம் இல்லாமல் போராடும் போராட்டக்காரர்கள் வன்முறை வேண்டாம் என தொடர்ந்து இராக்கின் ஷியா மதகுருமார்கள் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.
அக்டோபர் மாதம் முதல் இராக்கில் அரசுக்கு எதிராக ஆட்சி மாற்றம் வேண்டி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.