உலகம்

போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட ஈரான் தூதரகம்: இராக் கண்டனம்

செய்திப்பிரிவு

ஈரான் தூதரக் கட்டிடம் போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்டதற்கு இராக் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இராக்கின் தென் பகுதியில் இருக்கும் நஜஃப் நகரில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் புதன்கிழமை இரவு போராட்டக்காரர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரக அலுவலகக் கட்டிடத்துக்குத் தீ வைத்தனர்.

இந்தக் கலவரத்தில் 47 ஈரான் போலீஸார் காயமடைந்ததாக இராக் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்களால் ஈரான் தூதரகக் கட்டிடதுக்கு, தீ வைக்கப்பட்டதற்கு இராக் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இராக் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறும்போது, “நேரில் பார்த்தவர்களின் சாட்சிகளின் அடிப்படையில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரகக் கட்டிடத்தைச் சூழ்ந்துகொண்டு தீ வைத்துள்ளனர் என்பது தெரியவருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருக்கிறோம்” என்றார்.

அக்டோபர் மாதம் முதல் இராக்கில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகியுள்ளனர். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து இராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இராக்கில் முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்த, போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT