இராக்கில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் ஏற்பட்ட வன்முறையில் 47 போலீஸார் காயமடைந்தனர்.
இதுகுறித்து அல் அரேபியா வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில், “இராக்கின் தென் பகுதியில் இருக்கும் நஜஃப் நகரில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் புதன்கிழமை இரவு வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் ஈரான் தூதரக அலுவலகக் கட்டிடத்துக்குத் தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த வன்முறையில் சுமார் 47 போலீஸார் காயமடைந்தனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராகபோராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவரகளில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
இராக்கில் நடக்கும் வன்முறை காரணமாக, ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை ஷியா மதகுருமார்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
அக்டோபர் மாதம் முதல் இராக்கில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 319 பேர் பலியாகி உள்ளனர். போராட்டம் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து இராக் பிரதமர் அப்துல் மஹ்தி தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இராக்கில் முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்த, போராட்டக்காரர்களை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.