உலகம்

200 ஹவுத்தி போராளிகளை விடுவித்த சவுதி

செய்திப்பிரிவு

ஐந்து ஆண்டுகளாக நடக்கும் ஏமன் போரை முடிவுக்குக் கொண்டுவர சவுதி கூட்டுப் படைகள் தாங்கள் பிடித்து வைத்திருந்த 200 ஹவுத்தி போராளிகளை விடுவித்தது. இந்நிலையில் சவுதியின் இந்த முடிவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் துணைத் தலைவர் முகமத் அலி கூறும்போது, “சவுதி கூட்டுப் படைகளின் இம்முடிவை நாங்கள் வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும் ஐக்கிய அமீரக ஆதரவு ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர்.

ஏமனில் ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ஏமன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் சவுதி இறங்கியுள்ளது.

SCROLL FOR NEXT