உலகம்

ஈரானில் நடந்த போராட்டத்தில் 731 வங்கிகள் எரிப்பு

செய்திப்பிரிவு

ஈரானில் சமீபத்தில் நடந்த வன்முறைப் போராட்டத்தில் சுமார் 731 வங்கிகளும், 140 அரசு அலுவலங்களும் எரிக்கப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் உள்துறை அமைச்சர் அப்துல்ரேசா ரஹ்மானி கூறும்போது, “ஈரானில் எரிவாயுப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட வன்முறைப் போராட்டங்களில் சுமார் 731 வங்கிகளும், 140 அரசு அலுவலங்களும் எரிக்கப்பட்டன. 70 பெட்ரோல் நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டன. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நவம்பர் 15-ம் தேதி முதல் நடைபெற்ற போராட்டங்களில் பங்கெடுத்தனர்” என்று தெரிவித்தார்.

ஆனால், தாக்குதல் நடந்த இடங்களை அவர் விரிவாகக் குறிப்பிடப்படவில்லை.

ஈரானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை 50 சதவீதம் கடந்த வாரம் உயர்த்தப்பட்டது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்த விலை உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் போராட்டக்காரர்களுக்கு எதிராக ஈரான் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் இறந்திருக்கலாம் என்று ஆம்னெஸ்டி தெரிவித்திருந்தது.

ஆம்னெஸ்டியின் இந்தக் குற்றச்சாட்டை ஈரான் அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT