ஈரான் அதிபர் ஹசன் (இடது) , அமெரிக்க அதிபர் ட்ரம்ப் (வலது) 
உலகம்

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

எங்கள் நாட்டின் எல்லையை மீறினால் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் அழிக்கப்படுவார்கள் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரான் புரட்சிப் படையின் தளபதி அமெரிக்காவுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அரசுக்கு ஆதரவானபேரணியில் ஈரான் புரட்சிப் படையின் தளபதி ஹுசைன் பேசும்போது, “அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகியவை எங்கள் பிராந்தியத்தில் அமைதியின்மையைத் தூண்டுகின்றன. இதன் காரணமாக ஈரான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்படுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் சவுதியின் விரோத நடவடிக்கைகளுக்கு ஈரான் பொறுமையைக் கடைப்பிடித்தது. ஆனால் எல்லையை அவர்கள் மீற நினைத்தால் நிச்சயம் அழிக்கப்படுவார்கள்” என்று எச்சரித்தார்.

ஈரான் - அமெரிக்கா மோதல்

முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது.

இதனால் அமெரிக்கா ஈரான் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

SCROLL FOR NEXT