உலகம்

அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 140 பேர் காயம்

செய்திப்பிரிவு

அல்பேனியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்கப் புவியியல் மையம் தரப்பில், “அல்பேனியா தலைநகர் திரானாவிலிருந்து சுமார் 18 மைல்கள் தூரம் உள்ள ஷிஜக் நகரில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் 20 கி.மீ. இந்த நிலநடுக்கத்தின் மையம் கடற்கரை நகரான டுரஸ்ஸில் உருவாகி உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் காரணமாக சுமார் 140-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும், 3 பேர் பலியானதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் சாலைகள் சேதமடைந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பல இடங்களில் அரசுப் பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கியுள்ளது.

அல்பேனியாவில் இரு மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன. பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT