ஹாங்காங் தேர்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதை சீன அரசு ஊடகம் மறைமுகமாக விமர்சித்துள்ளது.
ஹாங்காங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக ஆதரவாளர்கள் 90% வெற்றி பெற்றனர்.
தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சியான ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளது ஹாங்காங்கில் அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது என்று ஹாங்காங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் ஹாங்காங் மாவட்ட கவுன்சில் தேர்தலில் ஜனநாயக ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதை சீனா விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.
தேர்தலின் முடிவு எதுவாக இருந்தாலும் ஹாங்காங் சீனாவின் ஒருபகுதிதான் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்தார்.
ஜனநாயக வேட்பாளர்களின் வெற்றியை சீன அரசு ஊடகம் விமர்சித்துள்ளது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயரையும் வெளியிட சீன அரசு ஊடகம், ''ஹாங்காங்கில் நிலவும் அமைதியின்மை, தேர்தலைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தவறான தந்திரங்கள் மற்றும் மிரட்டல்களால் இந்தத் தேர்தல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், கடந்த 1997-ம் ஆண்டு விடுதலை பெற்றது. அதன் தொடர்ச்சியாக, சீனாவின் சிறப்பு நிர்வாக மண்டலமாக இணைக்கப்பட்டது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள போதிலும், தன்னாட்சி பொருந்திய பிராந்தியமாகவே விளங்கி வருகிறது.
இந்நிலையில், கிரிமினல் குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக ஒரு சட்டத்திருத்த மசோதாவை ஹாங்காங் நிர்வாகம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹாங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. போலீஸாரின் அடக்குமுறைக்கு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். எனினும், நாளுக்கு நாள் போராட்டம் வலுவடைந்து கொண்டே சென்றது.
இந்த சூழலில், சர்ச்சைக்குரிய இந்த மசோதா முழுவதுமாக திரும்பப் பெறப்படுவதாக ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லேம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். எனினும் ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக ஜனநாயக ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட கவுன்சில் தேர்தலில் பெரும் வெற்றியை அவர்கள் பெற்றுள்ளனர்.