கென்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ வெளியிட்ட செய்தியில், ”கென்யாவின் வடமேற்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்தது. இதில் சனிக்கிழமை மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 60 ஆக அதிகரித்துள்ளது. இதில் 7 பேர் குழந்தைகள். பலர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. மேலும் பல இடங்களில் சாலைகள் மற்றும் பாலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர்கள் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு குறித்து போகோட் பகுதியின் கவர்னர் ஜான் கிராப் கூறும்போது, “நாங்கள் கடந்த இரவு நடந்ததைப் போல மோசமான அனுபவத்தை இதுவரை கண்டதில்லை. தொடர்ந்து 12 மணிநேரம் மழைப்பொழிவு இருந்தது” என்று தெரிவித்தார்.
கென்ய அதிபர் கென்யட்டா , ”பேரழிவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு போதுமான அளவு போலீஸாரும் ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
கென்யாவில் அடுத்த மூன்று வாரங்களுக்கு கனமழை இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.