இஸ்தான்புல்லில் அனுமதி இல்லாமல் தங்கியிருந்த சுமார் 1 லட்சம் சிரிய அகதிகள் கடந்த ஜூலை மாதத்திலிருந்து வெளியேறி உள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிரிய உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு கூறும்போது, “ துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் அனுமதி இல்லாமல் தங்கியிருந்த சுமார் 1 லட்சம் சிரிய அகதிகள் கடந்த ஜூலை மாதத்திலிருந்து வெளியேறி வேறு மாகாணங்களுக்குச் சென்றனர்.
சுமார் 6,000 சிரிய அகதிகளுக்கு தற்காலிக குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. துருக்கியில் ஆப்பிரிக்கா மற்றும் மத்தியக் கிழக்கின் பிற நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கும் அடைக்கலம் அளிக்கப்பட்டுள்ளது ” என்றார்.
துருக்கியில் உள்ள சிரிய அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் எர்டோகன் அரசு செயல்படுகிறது என துருக்கி எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின. இந்நிலையில், சிரிய அகதிகளை அவர்கள் நாட்டுக்குத் திரும்புமாறு எப்போதும் கட்டாயப்படுத்தவில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் சமீபத்தில் விளக்கம் அளித்திருந்தார்.
முன்னதாக, சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச்சண்டை நடந்து வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் துருக்கி போன்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.