உலகம்

குளிரூட்டப்பட்ட ட்ரக்கினுள் புலம்பெயர்ந்தவர்கள் 25 பேர்: மீண்டும் அதிர்ச்சிச் சம்பவம்

செய்திப்பிரிவு

நெதர்லாந்து - பிரிட்டன் கப்பலில் குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் பிரிட்டனுக்கு செல்லவிருந்த 25 புலப்பெயர்ந்தவர்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து நெதர்லாந்து மீட்புப் பணி குழு கூறும்போது, “நெதர்லாந்து -பிரிட்டன் கப்பலில் குளிரூட்டப்பட்ட ட்ரக்கில் செவ்வாய்க்கிழமையன்று புலப்பெயர்ந்தவர்கள் 25 பேர் கண்டுப்பிடிக்கப்பட்டனர். இவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் யாரும் இறக்கவில்லை. இருவரது நிலைமை மட்டும் சற்று மோசமாக இருந்ததால் அவர்கள் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 23 பேரும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்.

பிடிப்பட்ட புலப்பெயர்ந்தவர்கள் எந்த நாட்டினர் என்ற தகவல் இதுவரை உறுதியாக கூற முடியவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் நெதர்லாந்து நகரான ப்ளார்டிங்கன் நகர மேயர் அன்னெமிக் ஜெட்டன் இச்சம்பவம் குறித்து கூறும்போது, “ இங்கிலாந்தில் துன்பகரமான சம்பவம் நிகழ்ந்த போதிலும் , மக்கள் அங்கு செல்ல முயர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறிய பின்னர் குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்பதற்காக முன் கூட்டியே அங்கு செல்ல மக்கள் முயற்சிக்கிறார்களா? “ என்று தெரிவித்தார்.

முன்னதாக லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் ( 31 பேர் ஆண்கள். 8 பேர் பெண்கள்) கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 39 பேரும் பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் என்று தெரியவந்தது. மரணமடைந்த அனைவரும் வியட்நாமை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த இயமன் ஹாரிசன் (23) என்பவர் மீது 41 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

உலகம் முழுதும் ஆட்கடத்தல் கும்பல்கள் வறுமையில் வாடுவோரை ஆசை காட்டி நாடுகளுக்கு கடின வேலைகளுக்காக கடத்தும் போக்குகள் அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT