உலகம்

டெல்லி காற்று மாசு குறித்து டிகாப்ரியோ பதிவு

செய்திப்பிரிவு

டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து ஹாலிவுட் நடிகரும் சுற்றுச் சூழல் ஆர்வலருமான லியானார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்று மாசு கடுமையாக அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த பின் மீதமிருக்கும் வைக்கோலை எரிப்பதால், கடுமையான புகைமூட்டம் டெல்லியைச் சூழ்ந்துள்ளது.

இது தவிர வாகனங்கள் பெருக்கம், கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மாசு ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையம் வரும் 5-ம் தேதி வரை டெல்லி மற்றும் என்சிஆர் மண்டலத்தில் கட்டிடப் பணிகளில் ஈடுபடத் தடை விதித்தது. பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

காற்று மாசு சற்றே குறைந்ததை அடுத்து 6-ம் தேதி, பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு ஆணையத்தின் அறிக்கைப்படி, காற்று மாசு மீண்டும் நெருக்கடி நிலையைத் தொட்டது. இதற்கிடையே கடந்த 15-ம் தேதி காற்று மாசு மிக மோசமான நிலையைத் தொட்டது. உலகிலேயே மிக மோசமான காற்று மாசு நகரம் என்ற நிலையையும் டெல்லி எட்டியது.

இந்நிலையில் டெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து லியானார்டோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

”சுமார் 1,500 குடிமக்கள் டெல்லியில் உள்ள இந்தியா கேட் நுழைவாயில் முன் நின்று டெல்லி எதிர்கொண்டுள்ள காற்று மாசைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு குரல் கொடுத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் அனைத்து வயது மக்களும் கலந்து கொண்டனர்.

உலக சுகாதார அமைப்பின் தகவல்படி இந்தியாவில் காற்று மாசு காரணமாக 1.5 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள் என்று கூறுகிறது. எனவே இம்மாதிரியான போராட்டங்கள் குடிமக்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் அலுவலகம் இப்பிரச்சினையைத் தீர்க்க சிறப்புக் குழுவை அமைந்துள்ளது. மேலும் இந்தக் குழு இவ்விவகாரம் தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உள்ளது”.

இவ்வாறு டிகாப்ரியோ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ''எங்களுக்கு பாதுகாப்பான எதிர்காலம் தேவை'' என காகித்தில் எழுதி அதனை உயர்த்திப் பிடித்திருந்த குழந்தையின் புகைப்படத்தையும் டிகாப்ரியோ பதிவிட்டுள்ளார்.

டெல்லி மாசு உட்பட, சுற்றுச் சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் லியானார்டோ டிகாப்ரியோவுக்கு இந்தியர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT