பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அக்டோபர் 22 ஆம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதைத் தொடர்ந்து உடனடியாக ஷெரீப், லாகூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார் நவாஸ் ஷெரீப்.
பாகிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலில் நவாஸ் ஷெரீப்பின் பெயர் அகற்றப்படாமல் இருந்ததால் நவாப்பின் லண்டன் பயணம் ஒருவாரம் தாமதமானது. இந்நிலையில் இன்று லாகூர் விமான நிலையத்தில் ஆதரவாளர்கள் கூடியிருக்க, தனது மருத்துவக் குழுவுடன் சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீப் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டனில் உள்ள சார்லஸ் டவுன் மருத்துவமனையில் நவாஸ் ஷெரீப் அனுமதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல்நலக் குறைவு காரணமாக சுமார் 8 வாரங்களுக்கு நவாஸ் ஷெரீப்புக்கு இஸ்லாமாபாத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.