சிரியாவில் வடக்குப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து துருக்கிஅரசு ஊடகமான அனடோலு வெளியிட்ட செய்தியில், “ சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி எல்லையில் உள்ள அல் பாப் நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது.
துருக்கி - சிரிய எல்லையில் துருக்கி ராணுவத்திற்கும் சிரிய படைகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாக அவ்வப்போது சண்டை நடந்து வருகிறது . ஆனால் இத்தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இதற்கிடையில் கிளர்ச்சியாளர்களிடமிருந்து இட்லிப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதற்காக அப்பகுதியில் மீண்டும் தாக்குதல் நடத்த சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் உத்தரவிட்டதைத் தொடர்ந்து இட்லிப் நகரில் இரண்டாவது நாளாக சிரியாவுடன் இணைந்து ரஷ்யப் படைகளும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் பகுதியை மீட்க இறுதிச்சண்டை நடந்து வருகிறது