வட மற்றும் தென் கொரியா எல்லையில் நீடிக்கும் போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
கொரிய எல்லைகளில் இரு நாட்டு ராணுவப் படைகளும் தயார் நிலையில் நிற்கும் நிலையில், ராணுவத்தினர் இல்லாத ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
தென் கொரியா மீது எந்த நேரமும் தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி தனது ராணுவத்துக்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டார். எல்லையில் இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கண்ட உத்தரவை கிம் ஜோங் உன் பிறப்பித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து எல்லையோரத்தில் வசிக்கும் மக்களை தென் கொரியா வெளியேற்றி வருகிறது. ராணுவ தளபதிகளுடன் தென் கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை அவசர ஆலோசனை நடத்தினார்.
கடந்த சில நாட்களாக தென் கொரியா- வட கொரியா எல்லையில் இரு ராணுவத்தினரும் பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
தென் கொரியா, எல்லையோரத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் மூலம் கம்யூனிஸ மற்றும் வடகொரிய எதிர்ப்பு பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்ளும்படி வட கொரியா எச்சரிக்கை விடுத்தது.
தென்கொரிய அரசு, பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால் தாக்குதல் நடத்தப்படும் என வட கொரிய அதிபர் கிம் கூறியிருந்தார்.
பின்வாங்கும் முயற்சியில் இருதரப்பும் இல்லாத சூழலில் அந்நாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.