இராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்
இதுகுறித்து இராக் உள்துறை அமைச்சகம் கூறும்போது, “இராக்கில் தாஹிர் சதுக்கத்தில் அரசுக்கு எதிரான போரட்டத்தின்போது வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு ஒன்று வெடித்தது. இந்தக் குண்டுவெடிப்பில் 6 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
அரசுக்கு எதிராக தாஹிர் சதுக்கத்தில் நடந்த இப்போராட்டத்தில் இராக்கின் பல்வேறு நகரங்களில் வந்திருந்த போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர்.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்தி பதவி விலகக் கோரி போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
ஒரு மாதத்திற்கும் மேலாக இராக்கில் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 300க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 15,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இராக்கில் போராட்டக்காரர்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்தி, முன்கூட்டியே தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா முன்னரே வலியுறுத்தி இருந்தது.
முன்னதாக, இராக்கில் நடைபெறும் அரசுக்கு எதிரான போராட்டத்தை அமெரிக்கா தூண்டுகிறது என்று ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.