’புல்புல்’ புயலுக்கு வங்க தேசத்தில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், “வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ‘புல்புல்' புயல், மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே உள்ள கடற்கரையில் சனிக்கிழமை இரவு கரையைக் கடந்தது. கரையைக் கடந்தபோது சுமார் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.
புயல் கரையைக் கடந்தபோது ஏற்பட்ட சூறாவளிக் காற்று மற்றும் கனமழையால், மரங்கள் பல இடங்களில் வேரோடு சாய்ந்தன. புயல் காரணமாக 10,000 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டன. 2 லட்சம் ஹெக்டேர் அளவிலான மூங்கில் மரங்கள் நாசமாகின.
மேலும் ’புல்புல்’ புயலுக்கு இதுவரை வங்க தேசத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாக வங்கதேச தேசியப் பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
’புல்புல்’ புயல் மேற்கு வங்க மாநிலத்திலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்புயல் காரணமாக இந்தியா, வங்க தேசத்தில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.