குர்து படைகள் வெளியேற்றுவது தொடர்பாக எங்களுக்கு அளித்த உறுதிமொழியை அமெரிக்கா இன்னும் நிறைவேற்றவில்லை என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் வியாழக்கிழமை கூறுகையில், ''சிரியா - துருக்கி எல்லைப் பிராந்தியத்திலிருந்து குர்து படைகளை முழுமையாக அகற்றுவது தொடர்பாக அமெரிக்கா அளித்த உறுதிமொழியை அந்நாடு முழுமையாக இன்னும் நிறைவேற்றவில்லை. கடந்த மாதம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி 120 மணி நேரத்தில் குர்து படைகள் அப்பகுதியிலிருந்து அகற்றப்படும் என்று அவர்கள் உறுதியளித்திருந்தனர்.
எனினும் இன்னும் எல்லைப் பகுதியில் குர்து படைகள் உள்ளனர். எனது அடுத்த வார அமெரிக்கப் பயணத்தில் இந்தப் பிரச்சினையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் எழுப்புவேன்” என்றார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் துருக்கி அதிபர் எர்டோகனும் புதன்கிழமை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு பேசினர். இதில் ஐஎஸ் இயக்கத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர். மேலும் துருக்கி - சிரிய எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.
இந்த உரையாடலில், அமெரிக்கா வர துருக்கி அதிபர் எர்டோகனுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 13 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை எர்டோகன் சந்திக்க உள்ளார்.