அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் பருமனானவர்கள் அதிகம் என்று சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.
மாறி வரும் வாழ்வியல் முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் காரணமாக உடல் பருமன் அதிகரித்து வருவது கவலைக்குரிய பிரச்சினையாக மாறி வருகிறது. உடல் பருமன் பிரச்சினைக்கு துரித உணவுகள் முக்கியக் காரணமாக இருப்பதால் அவற்றைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், பருமன் பிரச்சினை சார்ந்த ஆய்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள வாலட் ஹப் என்ற இணையதளம் அமெரிக்காவில் பருமனானவர்கள் அதிகம் உள்ள மாகாணங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியுள்ளது.
அந்த ஆய்வில், “அமெரிக்காவின் வாஷிங்டன் உட்பட 30க்கும் அதிகமான மாகாணங்களில் உடல் பருமன் மற்றும் எடை அதிகரித்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தினோம். இதில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் எடை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வில் அதிகம் பருமனானவர்கள் உள்ள மாகாணமாக மிசிசிப்பி கண்டறியப்பட்டுள்ளது.
முதல் ஐந்து இடத்தில் மிசிசிப்பி, மேற்கு வெர்ஜினியா, கென்டக்கி, டென்னிசி மற்றும் அலபாமா ஆகிய மாகாணங்கள் உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.