தாய்லாந்தில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலியாகினர்.
இதுகுறித்து தாய்லாந்து அதிகாரிகள் தரப்பில், “தாய்லாந்தில் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகமுள்ள தென் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இந்தத் தாக்குதலை முஸ்லிம் பிரிவினைவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய்லாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட மிகப் பெரிய துப்பாக்கிச் சூடு என்று தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்லாந்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக் கலவரத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சுமார் 7,000 பேர் பலியாகி உள்ளனர். தாய்லாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் பலரை தாய்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தக் கைது நடவடிக்கை தொடர்ந்து வரும் சூழலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.