ராமேசுவரம்
இலங்கையில் தனது தலைமையி ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு இலவச நாப்கின் வழங்குவேன் என அந்நாட்டு அதிபர் தேர்தல் வேட்பாளர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். இதனையொட்டி தன்னை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்த எதிர்க்கட்சியினருக்கு தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளார்.
இலங்கையில் நவம்பர் 16 அன்று நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும் களம் காண்கின்றனர். அதிபர் தேர்தலில் இவர்கள் உள்ளிட் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோத்தபய ராஜபக்சவிற்கு தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 17 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சஜித் பிரேமதாசவிற்கு இலங்கையின் பிரதான தமிழ் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சி, மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட 12 கட்சிகள் ஆதரவாக உள்ளன.
தமிழர்களுக்கு முக்கிய வேட்பளார்களின் வாக்குறுதிகள்:
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளரான மகிந்த ராஜபக்ச இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக தனது தேர்தல் அறிக்கையில், ''உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான வீட்டு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்டும், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர்களுக்கு காவல்துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும்'' உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாச தனது தேர்தல் அறிக்கையில் ''மலையக தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ 1500 ரூபாயாக உயர்த்தப்படும், நிலங்களுடன் கூடிய தனி வீடுகள் மலையக மக்களுக்கு வழங்கப்படும், உள்நாட்டு யுத்ததினால் பாதிக்கப்பட்டு நீண்டகால இடப்பெயர்வுகளினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் வணிக மறுசீரமைப்பு ஆகியன மேற்கொள்ளப்படும்,
யுத்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் எடுக்கப்படும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் மற்றும் இழப்பீடுகள் வழங்கப்படும்'' உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி உள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 1 அன்று அதிபர் தேர்தலின் தபால் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் தற்போது இலங்கையில் சூடுபிடித்துள்ளது.
திவுலப்பிட்டியில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது வேட்பாளர் சஜித் பிரேமதாச, ''இலங்கையில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் நாப்கின் பயன்படுத்தாததால் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். மாதவிடாய் காலங்களில் நாப்கின்கள் வாங்க முடியாத பெண்களுக்கு தனது ஆட்சியில் இலவசமாக நாப்கின்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று வாக்குறுதி அளித்தார்.
மக்கள் தொகையில் 53 சதவீதம் பெண்களைக் கொண்ட இலங்கையில் சஜித் பிரேமதாசவின் வாக்குறுதி வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றுள்ளதோடு அந்நாட்டு சமூக வலைதளங்களில் வாதப் பிரதிவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
மேலும் சஜித் பிரேமதாசவை பேட் மேன் (Pad Man) என்று எதிர்கட்சிகள் பகடி செய்யவும் தொடங்கியுள்ளனர். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள சஜித் பிரேமதாச, 'பேட் மேன்' என்கிற பட்டத்தைப் பெருமையுடன் சூடிக் கொள்வேன்' எனத் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் என்பவர் குறைந்த விலையில் சானிட்டரி நாப்கின்களை உற்பத்தி செய்து சமூக ஆர்வலராக பணியாற்றி வருபவர். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது.
அருணாசலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தி திரைப்படம் பேட் மேன் (Pad Man) . இதில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
எஸ். முஹம்மது ராஃபி