உலகம்

தாய்லாந்தில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவுடன் மோடி சந்திப்பு

செய்திப்பிரிவு

தாய்லாந்தில் நடந்து வரும் 35-வது ஆசியான் உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவைச் சந்தித்தார் இந்தியப் பிரதமர் மோடி.

இந்தியா-ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை தாய்லாந்து சென்றடைந்தார் மோடி. இதனைத் தொடர்ந்து பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றுப் பேசினார்.

அப்போது குருநானக்கின் 550-வது பிறந்த நாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மேலும், தாய்லாந்து மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, தாய்லாந்து நாட்டில் உள்ள ஏராளமான முதலீட்டாளர்கள், நிறுவனங்களின் தலைவர்கள், உலக முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்

இதில் மோடி பேசும்போது, “உலக அளவில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு சிறந்த பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 28,600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடாகப் பெற்றுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த 20 ஆண்டுகளில்தான் கிடைத்துள்ளது” என்றார்.

இந்நிலையில் இன்று (திங்ட்கிழமை) 35-வது ஆசியான் உச்சி மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை பிரதமர் மோடி சந்தித்தார். இந்தச் சந்திப்பில் கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

மேலும் ஜப்பான் - இந்தியா இடையே பொருளாதார ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவது குறித்தும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் திட்டப் பணிகள் குறித்தும் இரு நாட்டுத் தலைவர்கள் ஆலோசித்தனர். இத்துடன் வியட்நாம் பிரதமர் மற்றும் ஆஸ்திரேலியப் பிரதமருடனும் இரு நாடுகள் உறவு சார்ந்த ஆலோசனையிலும் மோடி பங்கேற்றார்.

SCROLL FOR NEXT