உலகம்

 சிரியாவின் வடக்கில் ரோந்து பணியை தொடங்கிய ரஷ்யா, துருக்கி

செய்திப்பிரிவு

சிரியாவில் வடக்குப் பகுதியில் துருக்கி மற்றும் ரஷ்ய படைகள் ரோந்து பணியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு சிரியாவில் குர்து படைகள் பின் வாங்கியதைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யா மற்றும் துருக்கி ராணுவ படைகள் கண்காணிப்புக்காக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அல் தர்பஸியாஹ் பகுதியில் ரோந்து பணியில் இரு படைகளும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை துருக்கி ராணுவமும், ரஷ்ய ராணுவமும் உறுதிப்படுத்தி உள்ளது.

துருக்கி - ரஷ்யா நாடுகளின் ஒப்பந்தத்திற்குப் பிறகு குர்து படைகள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு சிரியாவிலிருந்து துருக்கி படைகள் வெளியேறாவிட்டால் போர் ஏற்படும் என்று சிரிய அதிபர் ஆசாத் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்ப, துருக்கி மற்றும் குர்துப் படை இடையே 5 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

-ஏ.எஃப்.பி

SCROLL FOR NEXT