உலகம்

பாக்தாதியை கொன்றுவிட்டோம் என மகிழ்ச்சி அடைய வேண்டாம்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த ஐஎஸ் 

செய்திப்பிரிவு

ஐஎஸ் தலைவர் பாக்தாதியை கொன்றுவிட்டோம் என்று மகிழ்ச்சி அடைய வேண்டாம் என்று அமெரிக்காவுக்கு ஐஎஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் நிகழ்ந்த நாச வேலைகளுக்குக் காரணமாக இருந்த ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்கப் படைகளால் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டார். இராக்கைச் சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதியின் வயது 48.

சிரியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் அல் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்கப் படைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர் மறைந்திருந்த கட்டிடத்துக்குள் அதிரடியாகப் புகுந்த அமெரிக்கப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்கப் படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி, ஒரு குகை போன்ற சுரங்கத்துக்குள் புகுந்தார். அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து மரணம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பாக்தாதி இறந்த செய்தியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் அல்பாக்தாதி இறந்ததை ஐஎஸ் அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும் ஐஎஸ் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ‘‘ஐஎஸ் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹாஸ்மி அல் குரேஷி செயல்படுவார்’’ என்று தெரிவித்தார்.

மேலும் இதனுடன் அமெரிக்காவுக்கான எச்சரிக்கையும் ஐஎஸ் விடுத்திருந்தது.

அதில் ,”அல் பாக்தாதியை கொன்று விட்டோம் என்று மகிழ்ச்சி அடைய வேண்டாம் அமெரிக்கா. ஐஎஸ் தற்போது ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பரவியிருப்பதை நீங்கள் உணரவில்லையா? நாங்கள் பரவி கொண்டு இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT