ஆப்கானிஸ்தானில் 13 ஆண்டு கால போர் முடிவுக்கு வந்துள்ள நிலை யில், அமைதிப் பேச்சுவார்த்தை யில் ஈடுபடுவது இஸ்லாமிய சட்டப்படி சரியானதுதான் என்று தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர் தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் பண்டிகை வர உள்ள நிலையில், தலிபான் அமைப்பின் இணையதளத்தில் ஒமர் வெளி யிட்டுள்ள அறிக்கையில், “நமது மத ரீதியான நிபந்தனைகளை உற்று நோக்கினால், எதிரிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்து வதை அது தடை செய்யவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும். நம்முடைய இலக்கை அடைவதற்காக ஆயுதம் ஏந்தி போராடுவது, அரசியல் ரீதியிலான மற்றும் அமைதி வழி முயற்சி ஆகிய அனைத்துமே இஸ்லாமிய சட்டப்படி சரியானது ஆகும்” என்று கூறியுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு அல்காய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் வர்த்தக மையத் தின் மீது விமானங்களை மோதி தகர்த்தனர். இதையடுத்து, அந்த அமைப்பின் நிறுவனர் ஒசாமா பின்லேடனைக் கொல்வதற்காக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கனில் முகாமிட்டிருந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, நேட்டோ படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, அந்நாட் டின் பாதுகாப்பு ராணுவத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினைகளை பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தலிபான்களுக்கு ஆப்கன் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு வடக்கே மலைப்பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான முர்ரீயில் ஆப்கன் அதிகாரிகளும் தலிபான் அமைப்பின் பிரதிநிதிகளும் கடந்த வாரம் முதன்முறையாக நேருக்கு நேர் சந்தித்துப் பேசினர்.