உலகம்

துருக்கி படைகள் வெளியேறாவிட்டால் போர் தான் முடிவு: சிரியா அதிபர் ஆசாத் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

வடக்கு சிரியாவிலிருந்து துருக்கி படைகள் வெளியேறாவிட்டால் போர் ஏற்படும் என்று சிரிய அதிபர் ஆசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிரிய அதிபர் நேர்காணல் ஒன்றில் கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து துருக்கி படைகளை அரசியல் ரீதியாக வெளியேற்ற வேறு வழிகள் இல்லாத நிலையில் நிச்சயம் போர் மட்டுமே வாய்ப்பாக இருக்கும். குர்து கட்டுப்பாட்டு பகுதியில் சிரிய ராணுவம் நுழைந்தது வெறும் துருக்கி படைகளை எதிர்ப்பதற்கு மட்டுமல்ல, அங்கு ஆட்சியை மீட்டெடுப்பதற்காகவும்தான். குர்து படைகளின் பகுதிகளை சிரிய அரசு மீட்டெடுக்க சில காலம் தேவைப்படும். குர்து படைகளின் அனைத்து பகுதிகளையும் சிரிய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் எங்கள் கொள்கை” என்றார்.

துருக்கி - ரஷ்யா நாடுகளின் ஒப்பந்தத்திற்குப் பிறகு குர்து படைகள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து பின்வாங்கி உள்ளனர். இந்த நிலையில் சிரியா - துருக்கி எல்லையில் உள்ள ராஸ் அல் அய்னா பகுதியில் துருக்கி - சிரிய ராணுவ படைகள் வியாழக்கிழமை மோதலில் ஈடுபட்டனர்.

முன்னதாக துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்ப, துருக்கி மற்றும் குர்துப் படை இடையே 5 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT