உலகம்

ஏடனில் படைகளை வாபஸ் பெறும் ஐக்கிய அமீரகம்

செய்திப்பிரிவு

ஏமனின் கடற்கரை நகரமான ஏடனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அமீரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அமீரக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், “ஏமனின் கடற்கரை நகரமான ஏடனிலிருந்து ஐக்கிய அமீரகம் படைகளைத் திரும்பப் பெறுகிறது. எங்கள் படைகள் தாயகம் திரும்புகின்றன. இப்பகுதிக்கான பொறுப்பை சவுதி மற்றும் ஏமன் படைகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் ஏமனின் தென் பகுதிகளில் உள்ள பிற பகுதிகளில் தீவிரவாதத்தை எதிர்த்து ஐக்கிய அமீரகம் சண்டையிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் போர்

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.

ஏமனில் நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பசிக் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT