சாண்டியாகோ,
சிலி அதிபர் செபாஸ்டியன் பினேராவை பதவி விலகக் கோரி இன்று தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டனர்.
சிலி அரசாங்கத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் பேரணி, 1990-ல் சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேவின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடந்த பெரிய பேரணி எனக் கருதப்படுகிறது.
இதே கொள்கைகளுக்கு எதிராக சென்ற வாரம் நடைபெற்ற பேரணியில் 19 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இன்று நடைபெற்ற இந்த மாபெரும் பேரணியில் தலைநகரின் பிளாசா இத்தாலியா சதுக்கம் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத நிலையில் திரண்டதால் அண்டை வீதிகளில் கூட மேலும் ஆயிரக்கணக்கானோர் நின்றதாக எஃபே செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
ஆர்ப்பாட்டம் தொடங்கப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேரணியில் சிலர் "சிலி விழித்துக்கொண்டது" என்று ஒரு பெரிய பதாகையை ஏந்தி வந்தனர். சிலி அதிபர் செபாஸ்டியன் பினேரா பதவி விலக வேண்டுமென மக்கள் கோஷமிட்டனர். இக்கோரிக்கை பேரணியின் கொள்கைகளில் ஒன்றாக இல்லை என்று கூறப்படுகிறது.
அக்டோபர் 18-ம் தேதி சாண்டியாகோவில் மெட்ரோ ரயில் கட்டணத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தில் 41 சுரங்கப்பாதைகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ரயில்வே கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்டது. எனினும் அதன் பிறகு தொடர்பாக பரவலான அமைதியின்மை தொடங்கியது.
அரசாங்கக் கொள்கைகளுக்கு உருவான எதிர்ப்புகள் வன்முறைச் சம்பவங்களாக அதிகரித்தது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். சிலர் போலீஸ் மற்றும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். அரசாங்கம் அவசர காலநிலையை அறிவித்த பின்னர், பல நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன் பின்னர் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்துக்கொண்ட ராணுவம் பொது அமைதிக்குப் பொறுப்பேற்றது.
போராட்டங்களின்போது, சிலி மக்கள் குறைந்த ஓய்வூதியம், சம்பளம் மற்றும் மின் கட்டண உயர்வு எரிவாயு, பல்கலைக்கழக கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான விலை உயர்வுகள் குறித்தும் போராட்டக்காரர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
மத்திய துறைமுக நகரமான வால்ப்பரைசோவில் அமைந்துள்ள சிலியின் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு எதிரே ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர். இதனை அடுத்து நாடாளுமன்ற நடவடிக்கைகள் ரத்தாகின.
நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே, போராட்டக்காரர்கள் திரண்டபோது, சிலியின் ராணுவ மயமாக்கப்பட்ட தேசிய காவல்துறையான கராபினெரோஸின் கடந்த கால உறுப்பினர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்ற முயன்றதில் தோல்வியுற்றனர். இதனால் நாடாளுமன்றக் கூட்டத்தை இடைநிறுத்துமாறு மக்களவை சபாநாயகர் இவான் புளோரஸ் உத்தரவிட்டார்.
பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி பொது நிறுவனமான தேசிய மனித உரிமைகள் நிறுவனத்தின் (ஐ.என்.டி.எச்) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,840 ஆக உள்ளது.
வாரம் முழுவதும் நடந்த போராட்டங்களில் 582 பேர் காயமடைந்துள்ளனர், அவர்களில் 295 பேர் ரப்பர் தோட்டாக்கள் அல்லது கண்ணீர் புகை குண்டுகளால் தாக்கப்பட்டனர்.
ஐ.நா.வின் ஆய்வுக்குழு, போராட்டங்களின் போது ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அடுத்த வாரம் சிலிக்குச் செல்லும்.