துருக்கி தாக்குதல் காரணமாக சிரியாவிலிருந்து இராக் செல்லும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை கூறும்போது, “சிரியாவின் வடக்குப் பகுதியில் துருக்கி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து இராக் சென்ற அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இராக்கின் டுஹோக் மாகாணத்திற்கு வந்தடைந்த 8,000க்கும் அதிகமான சிரிய அகதிகளுக்கு உணவுகளை வழங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 1,76,000 பேர் சிரியாவின் வடக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறினர்.
குர்து - துருக்கி படைகள் மோதல்
வடக்கு சிரியாவில் துருக்கி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஐஏஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக, பாதுகாப்புக்காக 1000 அமெரிக்கப் படையினர் மேற்கு ஈராக் அனுப்பப்படுவார்கள் என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறின.
முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் துருக்கி அதிபர் எர்டோகன் சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து தனது படைகள் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.