உலகம்

பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு மாரடைப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மாரடைப்பால் அவதிப்பட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் ஹமித் சனிக்கிழமை கூறும்போது, “பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மாரடைப்பு காரணமாக லாகூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இப்போது அந்த மாரடைப்பிலிருந்து மீண்டுள்ளார். எனினும் பலவீனமாகக் காணப்படுகிறார்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, ஊழல் குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் நவாஸ் ஷெரிப். இதில் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து லாகூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அவருக்கு ஜாமீன் வழங்கியது.

பனாமா பேப்பர்ஸ் கசிந்ததில் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதியில் இருந்து நவாஸ் ஷெரீப் லாகூர் சிறையில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் மீது சவுத்ரி சர்க்கரை ஆலைக்கு முறைகேடாக பணப் பரிமாற்றம் செய்தது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது ஆகிய பிரிவுகளின் கீழ் ஊழல் தடுப்புப் பிரிவு ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மரியம் நவாஸ் அளித்த பதிலும், விசாரணையில் அளித்த பதிலும் முரண்பட்டு இருந்ததால், அவரை கடந்த ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT