39 உடல்கள் இருந்த ட்ரக்கை லண்டன் போலீஸார் ஓட்டிச் சென்றனர். | ஏ.எப்.பி. 
உலகம்

லண்டன் அருகே ட்ரக்கில் 39 உடல்கள்: சீன நாட்டினர் என திடுக் தகவல்; சீன தூதரக அலுவலர் விரைந்தார்

செய்திப்பிரிவு

பீஜிங், ஏ.எஃப்.பி.

லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது என்றால், அவர்கள் சீன நாட்டினர் என்று வெளியாகி வரும் தகவல்கள் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் இவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் இவர்கள் 39 பேரும் எப்படி கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டு எப்படி கன்டெய்னரில் அடைக்கப்பட்டனர் என்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லண்டன் தலைமை போலீஸ் அதிகாரி ஆண்ட்ரிவ் மாரினர் கூறும்போது, “நாங்கள் கொல்லப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படும். விசாரணை தொடர்ந்து நடை பெற்று வருகிறது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த 39 பேரும் சீன நாட்டவர்கள் என்று பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதனையடுத்து சீன தூதரக ஊழியர் ஒருவர் பிரிட்டனில் இந்த 39 உடல்கள் வைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்துள்ளார். அவர்கள் சீனர்களா என்பதை அடையாளம் காண அவர் சென்றிருப்பதாகத் தெரிகிறது.

பிரிட்டிஷ் ஊடகங்கள் அது சீனர்களின் உடல்கள் என்று கூறுகிறது.

இப்படி நடப்பது இது முதல் முறையல்ல, 2000-ம் ஆண்டில் புலம் பெயர்ந்த 58 சீனர்களின் உடல்கள் இதே போல் தென்கிழக்கு டோவர் துறைமுகம் அருகில் லாரி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது, ஆனால் அப்போது இருவர் உயிருடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT