அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய குடும்பத்தைச் சேர்ந்த புளூட்டோவை ஆய்வு செய்வதற்காக 2006-ம் ஆண்டில் நியூ ஹாரிசன் விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலம் 9 ஆண்டுகளுக்கு மேலாக விண் வெளியில் பயணம் செய்து கடந்த ஜூலை 14-ம் தேதி புளூட்டோவை மிக நெருக்கமாக கடந்து சென்றது.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாசா விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. நியூ ஹாரிசன் சிக்னல் வடிவில் அனுப்பும் ஒரு தகவல், பூமியை வந்தடைய சுமார் நாலரை மணி நேரமாகிறது. அந்த வகையில் இதுவரை 5 சதவீத தகவல்கள் மட்டுமே நாசாவுக்கு கிடைத்துள்ளன. அனைத்து தகவல்களும் வந்துசேர சுமார் 16 மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது.
நாசா விண்வெளி ஆய்வு மையம் கடந்த 14-ம் தேதி முதல்முறையாக புளூட்டோவின் உண்மையான புகைப்படங்களை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதன்மூலம் மேலும் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
புளூட்டோவில் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பூமியில் பனிச் சிகரங்கள் உருகி ஓடுவதுபோல புளூட்டோவிலும் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் உருகி ஓடியிருப்பது தெரியவந்துள்ளது.
புளூட்டோவின் வெப்பநிலை மைனஸ் 229 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்த குளிர்நிலையில் பனி உருக வாய்ப்பில்லை. ஆனால் புளூட்டோவில் காணப்படும் நைட்ரஜன் பனிச்சிகரங்கள் மிகவும் மென்மைத்தன்மையுடன் இருப்பதால் உருகி ஓடும் தன்மை கொண்டுள்ளன என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பூமி, செவ்வாய்க் கிரகங்களில் இருப்பது போன்ற மேற்பகுதி புளூட்டோவின் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. புளூட்டோவில் மலைச்சிகரங்களும் காணப்படுகின்றன. அவற்றுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் முதன்முறை யாக ஏறிய எட்மண்ட் ஹிலாரியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நியூ ஹாரிசன் எடுத்துள்ள புகைப்படங்கள் அனைத்தும் பூமியை வந்துசேரும்போது மேலும் பல்வேறு புதிய தகவல்கள் கிடைக் கும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.