மாட்ரிட், பிடிஐ
இதுவரை நடத்தப்படாத பரந்துபட்ட மருத்துவ ஆய்வு ஒன்றில் ரத்த அழுத்த மாத்திரைகளை எப்போது எடுத்துக் கொண்டால் அது சிறப்பான பலன்களை அளிக்கிறது என்பதை ஆய்வுபூர்வமாகக் கண்டுபிடித்து முக்கியத் தகவல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பிய இருதய இதழில் வெளியாகியிருக்கும் இந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும், எதிர்க்கும் மாத்திரைகளை தினசரி இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரே முறை எடுத்துக் கொள்வதால் பலன்கள் அதிகம் என்றும் காலையில் எடுத்துக் கொள்வதில் சிலபல சிக்கல்கள் இருக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.
இரவு படுக்கச் செல்லும் முன் ரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மாரடைப்பு (heart attack), இருதயத்துக்கு எடுத்துச் செல்லப்படும் ரத்த ஓட்டம் இடைநிறுத்தத்தினால் இருதயத் தசையின் இயக்கத்தை சற்றே முடக்குவதால் ஏற்படும் myocardial infarction, ஸ்ட்ரோக், இருதயச் செயலிழப்பு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகளை பெரிய அளவில் குறைக்க முடிகிறது.
அதே வேளை காலை எழுந்தவுடன் ரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில் சிலபல சிக்கல்கள் உள்ளன.
இந்த ஆய்வில் சுமார் 19,084 ரத்த அழுத்த நோயாளிகள் பங்கேற்றனர், இவர்களுக்கு காலையிலோ அல்லது இரவு படுக்கச் செல்லும் முன்போ ரத்த அழுத்தக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டன, சுமார் 6 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகளை ஆராய்ந்த போது இரவு படுக்கச் செல்லும் முன் ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு இருதய நோய்களினால் இறப்பு ஏற்படும் வாய்ப்பு 66% குறைந்திருப்பது தெரியவந்தது. ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்பு 50% குறைவாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வைத் தலைமையேற்று நடத்திய ஸ்பெயினின் வீகோ பல்கலைக் கழக ஆய்வாளர் ஹெர்மிடா கூறும்போது, பொதுவாக காலையில் எழுந்தவுடன் இருக்கும் ரத்த அழுத்தம் குறித்த தகவல்களால் மருத்துவர்கள் காலையில் ரத்த அழுத்த தடுப்பு மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனர். அதாவது காலையில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் ‘தவறான’ ஒரு முடிவினால் இவ்வாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒருவர் தூங்கும்போதுதான் சராசரி சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உறக்க ரத்த அழுத்தத்திற்கும் விழித்துக் கொண்டிருக்கும் போது மருத்துவரைப் பார்க்கும் தருணத்தில் பரிசோதிக்கப்படும் ரத்த அழுத்தத்திற்கும் வேறுபாடு உள்ளது. காலையில் ரத்த அழுத்த சிகிச்சை மாத்திரைகளை எடுத்து கொள்வதன் மூலம் இருதய நோய்கள் குறைகிறது என்பதை ஆய்வுகள் இதுவரைக் கண்டுபிடித்ததில்லை என்கிறார் ஹெர்மிடா.
எனவே இரவில் படுக்கச் செல்லும் முன் ரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்வது உறக்க நிலை உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் நல்ல பலன் அளிப்பதாக இந்த ஆய்வுகள் கூறுகின்றன.