இஸ்லாமாபாத்
கர்தார்பூர் வழித்தடம் நவம்பர் 9-ம் தேதி திறக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானின் கர்தார்பூரில் தனது கடைசி காலத்தில் வாழ்ந்தார். அங்கு அவரது நினைவாக குருத்வாரா தர்பார் சாஹிப் கட்டப்பட்டுள்ளது.இந்த குருத்வாராவுக்கு செல்வதை சீக்கிய மதத்தினர் அனைவரும் தங்களது புனித கடமையாக கருதுகின்றனர்.
அந்த குருத்வாராவுக்கு இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் விசா உள்ளிட்ட எந்த நடைமுறையும் இல்லாமல் சென்று வருவதற்கு வழிவகை செய்து தரும் வகையில், கர்தார்பூர் வழித்தடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். பாகிஸ்தான் தரப்பில் நரோவால் பகுதியில் பிரதமர் இம்ரான் கான் அடிக்கல் நாட்டினார்.
இருதரப்பு நாட்டு அதிகாரிகள் மட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி ஆடாரியில் முதல்சுற்றுப் பேச்சு நடந்தது. புல்வாமா தாக்குதல் நடந்தபின் இந்த பேச்சு நடந்ததால், அதிகமாக ஏதும் விவாதிக்கப்படவில்லை.
ஆனால், இருதரப்பினரும் சேர்ந்து, ஜீரோ பாயின்ட்டில் சேர்ந்து நடத்திய பேச்சின்போது, தொழில்நுட்ப விஷயங்கள், சாலை அமைப்பது, ராவி நதியில் வெள்ளம் வந்தால் குறுக்கே பாலம் அமைப்பது ஆகியவை குறித்து பேசப்பட்டது.
இந்திய எல்லையில் இருந்து குருதுவாரா சாஹிப் வரை பாகிஸ்தான் பாதை அமைப்பது என்றும், பஞ்சாபின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் முதல் எல்லைப்பகுதி வரை இந்தியஅரசு சாலை அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு அதன்படி பணிகள் நடந்து வருகின்றன.
கர்தார்பூர் வழித்தடம் திறப்பு விழா குறித்து பாகிஸ்தான் தரப்பில் முரண்பட்ட தகவல்கள் வெளியே வந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில் கர்தார்பூர் வழித்தடம் நவம்பர் 9-ம் தேதி திறக்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
கர்தார்பூர் குருத்வாரா இந்தியா மட்டுமின்றி உலக அளவில் உள்ள சீக்கியர்களுக்கும் மிக முக்கியமானது. இதனால் உலகம் முழுவதும் இருந்து சீக்கிய பக்தர்கள் அதிகஅளவில் வருவார்கள். இதனால் பாகிஸ்தானில் ஆன்மீக சுற்றுலா வளர்ச்சி பெறும். உள்ளூர் பொருளாதாரமும் மேம்படும்.
அந்நியச் செலாவணியும் அதிகஅளவில் கிடைக்கும். கர்தார்பூர் சாலை நவம்பர் 9ம்- தேதி திறக்கப்படும். சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறந்த 550 ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில் கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.