உலகம்

வங்கதேசத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய வீரர்; எல்லையில் பலத்த பாதுகாப்பு

செய்திப்பிரிவு

இந்திய எல்லையோரப் பாதுகாப்புப் படையினர் மீது வங்கதேச வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் மத்திய வங்கதேசத்தில் உள்ள முர்ஷிதா பாத்தில் வியாழக்கிழமை நடந்தது.

வங்கதேச எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் மேற்கு வங்க மீனவர்கள் மீன் பிடித்ததால் அவர்களை வங்கதேச பாதுகாப்புப் படையினர் சிறைப்பிடித்ததாகவும், இதில் இருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த மீனவரை மீட்க இந்திய எல்லையோரப் பாதுகாப்புப் படையினர் மூவர் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் சீருடை அணிந்தும் மற்ற இருவர் சீருடை அணியாமலும் இந்திய - வங்கதேச எல்லையில் அமைந்துள்ள பத்மா ஆற்றில் படகில் சென்றனர்.

அப்போது இந்திய - வங்கதேச எல்லையில் வங்கதேசப் பாதுகாப்புப் படையினர் தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் மூத்த காவலர் ஒருவர் பலியானதாகவும் படகு ஓட்டுநர் உட்பட இரு வீரர்கள் காயமடைந்ததாகவும் இந்திய எல்லையோரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஆனால், இந்திய எல்லையோரப் பாதுகாப்புப் படையின் குற்றச்சாட்டை வங்கதேசப் பாதுகாப்புப் படையினர் மறுத்துள்ளனர். இந்தச் சம்பவம் காரணமாக இந்திய - வங்கதேச எல்லையில் பதற்றம் நிலவியது. இரு நாட்டு எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று இந்தியா - வங்கதேசம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT