மியான்மர் குறித்த பல சுவாரஸ்யங்கள் உண்டு. மியான்மர், பர்மா ஆகிய இரண்டு வார்த்தைகளுமே அங்கு பல நூற்றாண்டுகளாக நிலவி வருபவைதான். என்றாலும், மியான்மர் என்பது அதிகாரபூர்வ பெயராக இருந்தது. ஆங்கிலேயர்கள் இதை தங்களது காலனி நாடாக ஆக்கிக் கொண்ட பிறகு பர்மா என்றே அதை குறிப்பிடத் தொடங்கினார்கள் ஆவணங்களிலும். விடுதலை அடைந்தவுடன் பர்மா தன்னை மீண்டும் மியான்மர் ஆக்கிக் கொண்டது. ரங்கூன் யாங்கூன் ஆனது. (ஒரு முக்கியத் தகவல். மியான்மரின் தற்போதைய தலைநகர் யாங்கூன் எனப்படும் ரங்கூன் அல்ல. 2005 நவம்பரிலிருந்து அதன் தலைநகர் நே ப்யி தா).
மியான்மர், அமெரிக்கா, லைபீரியா ஆகிய மூன்று நாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சம் என்ன தெரியுமா? மெட்ரிக் அளவீடை ஏற்றுக் கொள்ளாத நாடுகள் இவை.
கிரெடிட் கார்டை மட்டும் எடுத்துக் கொண்டு மியான்மருக்குச் செல்வது புத்தி சாலித்தனம் அல்ல. அவற்றை பல வணிக நிறுவனங்களும் அங்கு ஏற்றுக்கொள்வ தில்லை. அதனால் என்ன? ஏடிஎம் கருவிகளி லிருந்து பணம் பெறலாமே என்கிறீர்களா?
பெறலாம். ஆனால் மியான்மரில் குறை வான எண்ணிக்கையில்தான் ஏடிஎம்கள் உண்டு.
முடி வெட்டிக்கொள்ள திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். காரணம் இந்த நாட்களி லும் தங்கள் பிறந்த நாளிலும் முடிவெட்டிக் கொண்டால் ஆகவே ஆகாது என்ற நம்பிக்கை உள்ளூர் மக்களிடையே நிலவு கிறது. எனவே சாவகாசமாக உங்கள் ரோம சாம்ராஜ்யத்தை செப்பனிட்டுக் கொள்ளலாம்.
மியான்மரின் கொடி முன்பு அசப்பில் தைவானின் கொடியைப் போலவே இருக்கும் (சீனாவிலிருந்து பிரிந்து தன்னைத் தனி குடியரசாக அறிவித்துக் கொண்டது தைவான். ஆனால் தைவான் தன்னில் ஒரு பகுதிதான் என்கிறது சீனா. ஐ.நா.வைப் பொறுத்தவரை தைவான் தனி நாடல்ல. ஆனால் விளையாட்டு, அழகிப் போட்டி போன்றவற்றில் தைவான் தனியாகத்தான் பங்கு பெறுகிறது.) பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸின்போது தங்கள் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தைவான் ஆதரவாளர்கள் மியான்மர் தேசியக் கொடியை அசைத்துக் கொண்டிருந்தார்கள்! (பெய்ஜிங்கில் தைவானின் தனிக் கொடிக்குத் தடை.)
இப்படி நினைத்துப் பார்க்கக் கூடிய வித்தியாசமான விஷயங்கள் மியான்மர் தொடர்பாக நிறைய உள்ளன என்றால் நினைத்துப் பார்க்க முடியாத கற்பனைகள்கூட சரித்திரத்தில் நடைபெற வாய்ப்பு உண்டு என்பதும் மியான்மர் விஷயத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சீன அரசு ஆங் சான் சூச்சிக்கு அழைப்பு விடுக்க அவரும் அதை ஏற்றுக் கொண்டிருக்கிறார்!
மியான்மரை ஆட்சி செய்த ராணுவ அதிகாரிகளுக்கு தொடர்ந்து உதவி செய்து வந்திருக்கிறது பெய்ஜிங். இந்த ராணுவ ஆட்சி ஆங் சான் சூச்சியை தொடர்ந்து வீட்டுச் சிறையில் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான் ஆங் சான் சூச்சிக்கான சீன அழைப்பு. மியான்மர் அரசு குறித்த பிம்பம் சீனாவைப் பொறுத்தவரை சிதைந்திருக்கிறது என்பதற்கான ஓர் அடை யாளமாக இதை எடுத்துக் கொள்ள முடியும்.
1988லிருந்து 2013 வரை மியான்மரில் செய்யப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளில் 42 சதவிகிதம் சீனாவினுடையது. எனினும் கூட மியான்மர் மக்களிடையே சீனாவுக்கு நல்ல பெயர் இல்லை. நிலப்பறிப்பு, மிகக் குறைவான கூலிக்கு வேலை செய்ய அங்கு வரும் சீனர்கள் போன்றவை முக்கியக் காரணங்கள். மியான்மரின் ராணுவத் தளவாடங்களில் 60 சதவிகிதம் சீன இறக்குமதிதான்.
எதனால் இப்போது சீன - மியான்மர் உறவுகளில் ஒரு சிறிய பின்னடைவு? இராவதி நதியில் ஓர் அணை கட்டித்தர சீனா ஒப்புக் கொண்டிருந்தது. அந்தத் திட்டத்தை சீனா வாபஸ் பெற்றது. காரணம் மியான்மர் ராணுவத்தின் வான்வெளித் தாக்குதலில் புரட்சியாளர்களோடு சேர்ந்து சீனர்கள் ஐந்து பேரும் இறந்து விட்டனர். இது தற்செயலானது என்று சீனா நினைக்கவில்லை.
இத்தனை வருடங்களாக இல்லாமல் பிற நாடுகளுடன் அதிக அளவில் பொருளாதாரத் தொடர்புகள் வைத்துக் கொள்ளலாம் என்று மியான்மர் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது. இதையும் சீனா முழு மனதோடு ஏற்கவில்லை. தன்னை அண்டியே மியான்மர் இருக்க வேண்டும் என்பது அதன் எண்ணம்.
மியான்மர் தனிமைப்பட்டே இருந்ததால் அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைந்தது. 2013ல் ஒரு நாளைக்கு 1000ம்பேர்கூட அங்கு சுற்றுலாவுக்கு வரவில்லையாம்.
இப்போது மியான்மரிலிருந்து வெளியேறியவர்களில் கணிசமானவர்கள் மீண்டும் மியான்மருக்குத் திரும்புகின்றனர். இந்த வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிட 70 அரசியல் கட்சிகள் அங்கு பதிவு செய்து கொண்டிருக்கின்றன. சில வெளிநாட்டு ஊடகங்களுக்குக்கூட மியான்மரில் இப்போது அனுமதி உண்டு.
சீனாவுக்கும், மியான்மருக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளி இந்தியாவுக்குப் பயன் அளிக்குமா? பலன் என்று இல்லாவிட்டாலும் கசப்புகள் குறைய வாய்ப்பு உண்டு. மியான்மர் எல்லைக்குள் இந்திய ராணுவம் புகுந்து (அங்கிருந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டு வந்த) தீவிரவாதிகளை இந்திய ராணுவம் வீழ்த்தி இருக்கிறது. இதற்கு அந்த நாட்டின் மறைமுக சம்மதம் இருக்க வாய்ப்பு உண்டு.
மியான்மரில் வசிக்கும் இந்தியர்கள் இனியாவது தங்களுக்கு கொஞ்சம் அங்கீகாரம் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள். ஏன், என்ன ஆயிற்று அவர்களுக்கு என்கிறீர்களா? பார்ப்போம்.
(உலகம் உருளும்)