பிரதிநிதித்துவப்படம் 
உலகம்

27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது

செய்திப்பிரிவு

பெய்ஜிங்

கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3-வது காலாண்டில் 6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசின் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர், உள்நாட்டில் தேவை குறைந்துள்ளது போன்ற காரணிகள் பொருளாதார வளர்ச்சியைச் சரியவைத்துள்ளன என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2-வது காலாண்டில் சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 6.2 சதவீதமாக இருந்த நிலையில், ஜூலை-செப்டம்பர் மாதங்கள் கொண்ட 3-வது காலாண்டில் 6 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1992-ம் ஆண்டுக்குப் பின் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாகக் குறைவது இதுதான் முதல் முறை. ஆனால், சீனாவின் ஓராண்டின் பொருளாதார வளர்ச்சி சராசரி என்பது 6 சதவீதம் முதல் 6.5 சதவீதம் வரை வைத்திருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது. இருப்பினும் அதைக் கடந்துதான் சீனாவின் பொருளாதார வளர்ச்சி இருந்து வந்தது.

கடந்த ஆண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து தேசிய புள்ளியியல் துறையின் செய்தித்தொடர்பாளர் மாவோ ஷென்யாங் கூறுகையில், "நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டில் தேசியப் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையுடன்தான் இருந்து வருகிறது.

அதேசமயம், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நிலவும் குழப்பமான, தீவிரமான பொருளாதாரச் சூழல், உலகளாவிய பொருளாதார வளர்ச்சி சரிந்து வருவது, வெளிப்புறக் காரணிகளின் நிலையற்ற தன்மை, உறுதியில்லாத சூழல் போன்றவை பொருளாதாரத்தைச் சரிவுக்கு இட்டுச்செல்லும், அதில் விழிப்புடன் இருப்பது அவசியம்,

சேவைத்துறை, தொழில் நுட்பத்துறையில் வழக்கம் போல் வளர்ச்சி இருக்கிறது. வேலைவாய்ப்பு உருவாக்கமும் நிலையாக இருக்கிறது.

பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்க சீன அரசு வரிச்சலுகைகளையும், வரிகளை ரத்து செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், பங்குச்சந்தையில் வெளிநாட்டினர், வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதிலும் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வளர்ச்சியை ஊக்குவிக்க சமீபத்தில் 2800 கோடி டாலர் நிதியுதவியை மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்குக் கடனாக வழங்கியுள்ளது. இதன் மூலம் எளிதாக மக்களுக்குக் கடன் கிடைக்க வழி செய்துள்ளது. வரும் காலத்தில் மந்தநிலை சீராகும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்

சீனாவின் திடீர் பொருளாதாரச் சரிவுக்கு அமெரிக்காவுடன் இருக்கும் வர்த்தகப் போர் முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. வர்த்தகப் போர் காரணமாகச் சீனாவின் ஏற்றுமதியும், இறக்குமதியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றார்போல் சர்வதேச நிதியமும் சமீபத்தில் தனது அறிக்கையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை நடப்பு ஆண்டில் 6.2 சதவீதத்திலிருந்து 6.1 சதவீதமாகக் குறைத்துக் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

SCROLL FOR NEXT