துபாய்
ஐக்கிய அரபு நாட்டு அரசின் புதிய கல்வித்தகுதி விதிமுறையால், பட்டயப் படிப்பு முடித்து பணியாற்றிவரும் இந்திய செவிலியர்கள் ஏராளமானோர் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலையிழந்துவிட்ட நிலையில் வேறு வழியின்றி தாயகம் திரும்ப முடிவு செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் அரசு சமீபத்தில் கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, மருத்துவமனையில் பணியாற்றும் பதிவு செய்யப்பட்ட செவிலியர்களின் குறைந்தபட்சம் நர்ஸிங்கில் பட்டப்படிப்பு முடித்திருத்தல் வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது.
அவ்வாறு பட்டப்படிப்புக்கும் குறைவாக பட்டயப் படிப்பு முடித்து பணியாற்றிவரும் செவிலியர்களை மருத்துவமனைகள் நீக்கி வருகின்றன. அந்த வகையில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இதுவரை வேலையிழந்துள்ளார்கள் என வளைகுடா செய்தி தெரிவிக்கிறது
நர்ஸிங்கில் டிப்ளமோ படித்து வேலையிழந்த செவிலியர்கள் மீண்டும் பணிக்கு சேர்க்கப்படவும் வாய்ப்புள்ளது. வேலையிழந்த செவிலியர்கள் 2020-ம் ஆண்டுக்குள் அந்நாட்டு கல்வி அமைச்சகம் அங்கீகரித்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி நர்ஸிங் படித்து முடித்தால் அவர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வேலைக்குச் சென்று, அங்கீகாரம் இல்லாத பல்கலைக்கழகங்களில் பிஎஸ்சி நர்ஸிங் முடித்த ஏராளமான இந்திய செவிலியர்கள் இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கிறார்கள். அவர்கள் பிஎஸ்சி நர்ஸிங் படித்து முடித்து சான்று பெற்றாலும், அது அங்கீகாரம் இல்லாததாகவே கருதப்படும்.
கேரளாவில் உள்ள நர்ஸிங் பட்டயப் படிப்பு படித்து முடித்து சான்று பெற்றால் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகம் அரசு ஏற்கிறது. ஏனென்றால், ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய கல்வித்துறை மூலம் அங்கீகரிக்கப்பட்ட ஒரே நர்ஸிங் கவுன்சில் கேரள நர்ஸிங் கவுன்சில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது
கேரளாவைச் சேர்ந்த பெண்கள்தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் செவிலியர்கள் பணியில் இருக்கிறார்கள். இதில் ஏராளமான பெண்கள் வெளிமாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் நர்ஸிங் முடித்து பணி செய்வோர்தான் இப்போது சிக்கலை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்று பாதிக்கப்பட்ட நர்ஸ்கள் தெரிவிக்கின்றனர்
செவிலியர் பணி இழந்த ஒரு பெண் கூறுகையில், " ஏற்கெனவே நூற்றுக்கணக்கான பேர் வேலையிழந்துவிட்டோம். இனிமே ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலையில் தொடர முடியாத சூழல் இருக்கிறது. வேறு வேலைக்குச் செல்ல வேண்டும் அல்லது இங்கிருந்து வெளியேற வேண்டும் என்ற வாழ்வா சாவா நிலையில் இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல உள்ள மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி. முரளிதரனைச் சந்தித்து தங்கள் குறைகளைத் தெரிவிக்க செவிலியர்கள் திட்டமிட்டுள்ளார்கள்.
ஐஏஎன்எஸ்