உலகம்

18 ஐஎஸ் தீவிரவாதிகளை பிடித்து சுட்டுக் கொன்றது போட்டி அமைப்பு: சிரியாவில் தீவிரவாத இயக்கங்களுக்கு இடையே மோதல்

ஏஎஃப்பி

சிரியாவில் 18 ஐஎஸ் தீவிரவாதி களை பிடித்து சுட்டுக் கொன்றுள்ளது ஜெய்ஸ் அல்-இஸ்லாம் என்ற போட்டி தீவிரவாத அமைப்பு.

இதுவரை ஐஎஸ் தீவிரவாதிகள்தான் தங்கள் கையில் கிடைத்தவர்களின் தலைகளை துண்டித்து வந்தனர். இப்போது முதல்முறையாக ஐஎஸ் தீவிரவாதிகள் 18 பேரைப் பிடித்து போட்டி அமைப்பினர் கொன்றுள்ளனர்.

இது தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகள் 18 பேர் கருப்பு நிற உடையணிந்து, கை மற்றும் கால்களில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் உள்ளனர்.

அவர்கள் அருகே ஆரஞ்சு நிற உடையில் இருக்கும் ஜெய்ஸ் அல்-இஸ்லாம் தீவிரவாதிகள் அவர்களது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றனர். சுமார் 20 நிமிடங்கள் இந்த வீடியோ ஓடுகிறது.

அந்த வீடியோவில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள், நாங்கள் சிரியா ராணுவத்துக்கு எதிராக போராடவில்லை. பிற போராளி அமைப்புகளுக்கு எதிராகவே சண்டையிட்டு வருகிறோம் என்று கூறுகின்றனர்.

ஜெய்ஸி அல்-இஸ்லாம் தீவிரவாத அமைப்பினரும் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஐஎஸ் தீவிரவாதிகள் சன்னி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஷியா முஸ்லிம் மற்றும் பிற முஸ்லிம் பிரிவினருக்கு ஆதரவாக செயல்பட்டு ஐஎஸ் தீவிரவாதிகள் துரோகம் இழைக்கின்றனர். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாதுடன் ஐஎஸ் அமைப்பினர் ரகசியமாக தொடர்பில் உள்ளனர் என்று வீடியோவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் இயக்கத்தை சேர்ந்த 3 உறுப்பினர்களின் தலையை ஐஎஸ் தீவிரவாதிகள் துண்டித்தனர். அதற்கு பழிவாங்கும் வகையில் இப்போது 18 பேரை கொன்றுள்ளதாகவும் ஜெய்ஸி அல்-இஸ்லாம் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.

கடந்த வாரம் தங்களுக்கு போட்டியாக செயல்படும் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 12 பேரின் கழுத்தை அறுத்து கொலை செய்து ஐஎஸ் தீவிரவாதிகள் வீடியோ வெளியிட்டனர்.

அதில் 3 பேர் ஜெய்ஸ் அல்-இஸ்லாம் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT