ஜப்பானில் தாக்கிய ஹகிபிஸ் புயலுக்கு இதுவரை 31 பேர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஹகிபிஸ் புயல் ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசிய ஹகிபிஸ் புயல் டோக்கியோவின் தென்மேற்குப் பகுதிகளில் நிலச்சரிவை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள், “ஹகிபிஸ் சூறாவளி, ஜப்பானின் பிரதான தீவின் கிழக்கு கடற்கரைக்கு 225 கி.மீ. வேகத்தில் நகர்ந்ததன் காரணமாக 2,70,000 க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரத்தை இழந்தன. சிகுமா உள்ளிட்ட 25 ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
இந்தப் புயல் காரணமாக சுமார் 31 பேர் பலியாகினர். 186 பேர் காயமடைந்தனர். 15 பேர் மாயமாகினர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தங்கள் வாழ்நாளில் இம்மாதிரியான வெள்ளப் பெருக்கைக் கண்டதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஜப்பானில் சில இடங்களில் தொடர்ந்து மழை பொழியும் என்று ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருவதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் ஜப்பானின் இந்த ஆபத்தான நிலையில் அந்நாட்டுக்குத் துணை இருப்போம் என்று தெரிவித்துள்ளன.