ஏமனில் தொடர்ந்து போர் நடத்தால் உலகிலேயே ஏழ்மையான மாறும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐ. நா வெளியிட்ட அறிக்கையில், “ ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் 2022 ஆம் ஆண்டுவரை நீடித்தால் ஏமன் உலகிலேயே ஏழ்மையாக நாடாக உருவாகக் கூடும். போர் காரணமாக 79 சதவீதம் மக்கள் வறுமை கோட்டின் கீழ் தள்ளப்படுவார்கள். 65 சதவீதம் பேர் மிகவும் மோசமான வறுமை நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
போர் காரணமாக 2014 -ல் 47 சதவீதம் இருந்த ஏமனின் வறுமை நிலை தற்போது 75 % சதவீதமாக உயர்ந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாகவும், விலைவாசி ஏற்றம் காரணமாகவும் 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உணவில்லாமல் தவித்து வருவதாக 'சேவ் தி சில்ட்ரன்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.
ஏமன் போர்
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.