ஒல்கா டோகார்ஸக் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஹே 
உலகம்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு: 2018, 2019 ஆண்டுகளுக்கு அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஸ்டாக்ஹோம்

2018, 2019-ம் ஆண்டுகளுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் பெரும் சாதனை புரிந்தவர்களுக்கு
நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. சுவீடன் நாட்டின் ஸ்வீடன் அகாடமி வழங்கி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் வில்லியம் காலின், கிரேக் செமென்ஸா, இங்கிலாந்தைச் சேர்ந்த பீட்டர் ராட்கிளிஃப் ஆகியோருக்கு 2019-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

2019-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு ஜேம்ஸ் பீபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் குவெலோஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஜான் கூட்எனஃப், இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பான் விஞ்ஞானி அகிரா யோஷினோ ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு

இதன் தொடர்ச்சியாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு போலந்து நாட்டை சேர்ந்த நாவலாசிரியர் ஒல்கா டோகார்ஸக் என்ற பெண் எழுத்தாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலக்கியத்துறைக்கு வாழ்வின் எல்லை கடந்து ஆற்றிய பணிகளுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. இந்த நூற்றாண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 15-வது பெண் இவர் ஆவார்.

அதுபோலவே 2019-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு ஆஸ்திரியாவை சேர்ந்த எழுத்தாளர் பீட்டர் ஹேண்ட்ஹே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மனித அனுபவத்தின் தனித்துவத்தை மொழியில் கூர்மையுடன் ஆராய்ந்தவர் பீட்டர் என சுவீடன் நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

நோபல் பரிசு இந்திய ரூபாய் மதிப்பில் 6 கோடியே 52 லட்சத்து 19 ஆயிரத்து 310 ரூபாய் பரிசுத் தொகையும், தங்க மெடலும் கொண்டது. கடந்த ஆண்டு சுவீடன் அகாடமி உறுப்பினரின் கணவர் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் காரணமாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை சுவீடன் அகடமி வழங்கி வருகிறது.

SCROLL FOR NEXT