இஸ்லாமாபாத்,
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்தியாவின் நடவடிக்கையை எதிர்த்து பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஏராளமான காஷ்மீர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டினை (எல்ஓசி) நோக்கி பேரணியாக அணிவகுத்து சென்றனர்.
பிரதமர் இம்ரான் கான் சனிக்கிழமையன்று ''ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாட்டைக் கடக்க வேண்டாம். காஷ்மீரிகளுக்கு மனிதாபிமான உதவி அல்லது ஆதரவை வழங்குவதற்காக கட்டுப்பாட்டுக்கோட்டைக் கடந்து சென்றால் அது இந்தியாவுக்கு சாதகமாகிவிடும்'' என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆகஸ்ட் 5 ம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ இந்தியா ரத்து செய்ததை யடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்தது. பாகிஸ்தான் இந்திய ராஜதந்திர உறவுகளை ரத்துசெய்து, இந்திய தூதரை வெளியேற்றியுள்ளது.
காஷ்மீர் பிரச்சினையை சர்வதேசமயமாக்க பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது, ஆனால் 370வது பிரிவை ரத்து செய்வது அதன் "உள்நாட்டுப் பிரச்சினை" என்று இந்தியா வலியுறுத்தியது. இந்தியா, பாகிஸ்தானிடம் யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளவும், அதன் இந்தியாவுக்கு எதிராக பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தும்படியும் கேட்டுக்கொண்டது.
பேரணியில் பங்கேற்றவர்கள், பெரும்பாலும் இளைஞர்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முசாபராபாத்தில் இருந்து சனிக்கிழமை காரி துப்பட்டா வரை சென்றனர், அங்கு அவர்கள் இரவுமுழுவதும் தங்கினர். பின்னர் மீண்டும் பேரணியைத் தொடர்ந்து தற்போது அவர்கள் முசாபராபாத்-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நகர்கின்றனர்.
இந்த எதிர்ப்புப் பேரணியை ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் ஊடகங்களிடம் ஜே.கே.எல்.எஃப் தலைவர் ரபீக் தார் கூறுகையில்,
பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரிலிருந்து சாகோதி வரை அவர்கள் செல்லும் பாதையைக் குறிக்கும் வரைபடம்
ராணுவம் வேண்டாம்
''இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான ஐ.நா .ராணுவ பார்வையாளர்கள்குழுவும் எங்களை தொடர்பு கொண்டனர். அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவப் படைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தானையும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளதாக'' தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டுப்பாட்டுக் கோட்டினைக் கடக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் சாகோதியை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அங்கு அவர்கள் அதிகாரிகளால் நிறுத்தப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹோலனை எல்லைக் கட்டுப்பாட்டு நிலையின் இரு பக்கங்களிலும் உள்ள பகுதிகளுக்கு சென்று களநிலவரத்தைக் காணுமாறு கேட்டுக்கொண்டார்.
-பிடிஐ