சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதுகுறித்து குழந்தைகள் நலன் சார்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று கூறும்போது, “ சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான இட்லிப் மாகாணத்தில் நடத்தப்பட்ட பீரங்கி தாக்குதலில் மருத்துவமனை ஒன்று பலத்த சேதமடைந்தது.
தாக்குதல் நடந்தபோது மருத்துவமனையில் 60 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் குழந்தைகளும் அடக்கம். இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
பின்னணி:
கடந்த 2017, 2018-ம் ஆண்டுகளிலும் சிரிய அதிபர் பொதுமக்கள் மீது ரசாயனத் தாக்குதலை நடத்தினார் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது. இதுகுறித்து சிரியா தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கடைசி இடமான இட்லிப் மாகாணத்தில் இறுதிச்சண்டை நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் வேறு நாட்டுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.