வளைகுடா பிராந்தியத்தில் ராணுவ ரீதியாக ஈரான் பின்வாங்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சவுதியின் எண்ணெய் ஆலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு பதற்றத்தைக் குறைக்க ராணுவ ரீதியாக ஈரான் பின்வாங்கவில்லை என்று மத்தியக் கிழக்கின் அமெரிக்க உயர்மட்ட ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜிம் மல்லாய் கூறும்போது, ''சவுதி மீதான தாக்குதலுக்குப் பிறகு ஈரான் தனது ராணுவ நடவடிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை. நாங்கள் ஈரானின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனித்து வருகிறோம்” என்றார்.
முன்னதாக, சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அரோம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆனால் இந்தத் தாக்குதல் பின்னணியில் ஈரான் இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
அமெரிக்கா மட்டுமில்லாது பிரான்ஸ், சவுதி, இங்கிலாந்து ஜெர்மனி போன்ற நாடுகளும் இந்தத் தாக்குதல் பின்னணியில் ஈரான்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளன. ஆனால் இதனை ஈரான் மறுத்துள்ளது. இதன் காரணமாக வளைகுடா பகுதியில் ஈரானுக்கும், சவுதிக்கும் மோதல் ஏற்படலாம் என்ற பதற்றம் நிலவுகிறது.