நவீன உலகம் சிக்கலானது, வித்தியாசமானது என்று கிரெட்டாவுக்கு யாரும் விளக்கவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்திலிருந்து புவியைக் காக்க தனி நபராகப் போராடத் தொடங்கியவர் கிரெட்டா துன்பெர்க். ஸ்வீடனைச் சேர்ந்த இவர் காலநிலை மாற்றம் குறித்து தற்போது உலகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஐ.நா.வில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் இந்த 16 வயது சிறுமி பேசியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், தனது பேச்சில் உலகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்திருந்தார் கிரெட்டா. அவரின் பேச்சுக்கு பரவலாகப் பாராட்டும் கிடைத்தது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் கிரெட்டாவாவின் பேச்சு குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு புதின் , “நான் கூறுவது உங்களுக்கு ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் கிரெட்டா துன்பெர்க்கின் பேச்சு பற்றிய பொதுவான உற்சாகத்தை நான் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. தற்போது இருக்கும் நவீன உலகம் சிக்கலானது, வித்தியாசமானது என்று கிரெட்டாவுக்கு யாரும் விளக்கவில்லை. ஆப்பிரிக்கா மற்றும் ஆசியக் கண்டங்களில் வசிக்கும் மக்களும் ஸ்வீடனில் இருப்பதைப் போல செல்வத்துடன் வாழ விரும்புகிறார்கள். இளம் தலைமுறையினர் சுற்றுச்சூழலுக்குக் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரியது ஆனால் குழந்தைகளையும் வளரும் இளம் பருவத்தினரையும் தங்களுடைய சுய எண்ணத்துக்காகப் பயன்படுத்துவது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டியது” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கிரெட்டா துன்பெர்க் பேச்சை விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.