வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்தடைந்தார்.
இதுகுறித்து ஏஎன்ஐ, “இந்தியா - வங்கதேசம் இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக வங்க தேசபிரதமர் ஷேக் ஹசினா நான்கு நாள் சுற்றுப் பயணமாக இன்று (வியாழக்கிழமை) இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியை வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து முதல் நிகழ்வாக புதுடெல்லியில் உலகப் பொருளாதார மையம் சார்பாக நடைபெறவுள்ள இந்தியப் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்திருனராக ஷேக் ஹசினா பங்கேற்கிறார். இதனையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியுடனும் இருதரப்பு உறவு குறித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் நீர் பங்கீடு, கலாச்சாரம், முதலீடு, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல துறைகள் சார்ந்து ஆலோசனைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த வாரம் நியூயார்க்கில் நடந்த 73- வது ஐக்கிய நாடுகள் சபை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில், இரு நாடுகளிடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை, தீவிரவாதம் மற்றும் பாதுகாப்பு உட்பட பல துறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா மேற்கொள்ளும் முதல் இந்திய சுற்றுப் பயணம் இதுவாகும்.