மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் : கோப்புப்படம் 
உலகம்

காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கிவிட்டால், பாகிஸ்தானின் 70 ஆண்டுத் திட்டம் தகர்ந்துவிடும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு 

செய்திப்பிரிவு

வாஷிங்டன்

காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கிவிட்டால், பாகிஸ்தானின் 70 ஆண்டு காலத் திட்டம் தகர்ந்துவிடும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 30-ம் தேதிவரை ஐ.நா.ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் சென்றனர். கடந்த 27-ம்தேதி பிரதமர் மோடி தாயகம் திரும்பிய நிலையில், ஐ.நா. கூட்டத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவுதான் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தாயகம் திரும்பினார்.

வாஷிங்டனில் இருந்து புறப்படும் முன் நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

அதற்கு அவர் பதில் அளிக்கையில், "காஷ்மீர் பகுதியில் மொபைல் நெட்வொர்க் நிறுத்தி வைக்கப்பட்டு்ள்ளது குறித்து அமெரிக்காவில் உள்ள பலதரப்பட்ட மக்களும் வருத்தப்படுகிறார்கள்.

ஆனால், இந்த சேவை நிறுத்தப்பட்ட நோக்கம், இணையதளத்தை தவறாகப் பயன்படுத்தி, தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்பிவிடுவார்கள். இதனால் அமைதியற்ற சூழல் உருவாகுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அங்கு படிப்படியாக இயல்புநிலை திரும்பி வருகிறது, உரிய நேரத்தில் காஷ்மீர் மக்களுக்கு இணைய தள சேவை வழங்கப்படும். கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காமல் இந்திய ராணுவம் பார்த்துக் கொண்டுள்ளது

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கைக்கு பல்வேறு விதமான கருத்துக்கள் வருகின்றன. அண்டை நாடும் காஷ்மீர் குறித்து இந்தியாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்துள்ளது. ஆனால், காஷ்மீரில் வளர்ச்சி தொடங்கிவிட்டால், பாகிஸ்தானின் 70 ஆண்டுகள் திட்டம் தகர்க்கப்பட்டுவிடும்.

பாகிஸ்தான் ஆக்கிரமி்ப்பு காஷ்மீராலும், தீவிரவாதிகளாலும், வன்முறையாலும் கடந்த 70 ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ளார்கள். வளர்ச்சிப் பாதைக்கு காஷ்மீர் பகுதி திரும்பி வி்ட்டால், மக்கள் எங்களை புரிந்து கொள்வார்கள்.

காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக எந்த விதமான உயிர் சேதமும் இல்லாமல் மாநில நிர்வாகம் பார்த்துக்கொண்டுள்ளது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏராளமான அனுபவம் கிடைத்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டில் நடந்த சம்பவங்களைப் பார்த்தால், இன்டர்நெட், சமூக ஊடகங்கள் வாயிலாக ஏராளமான வதந்திகளால் அங்கு பெரும் வன்முறை சூழல் உருவானது. ஆதலால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தோம்" எனத் தெரிவித்தார்.


பிடிஐ

SCROLL FOR NEXT